×

லண்டன் கத்திக்குத்து சம்பவத்தில் சுட்டு கொல்லப்பட்டவன் தண்டிக்கப்பட்ட தீவிரவாதி

லண்டன்: லண்டனில் நேற்று முன்தினம் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் சுட்டு கொல்லப்பட்டவன், தீவிரவாத வழக்குகளில் ஏற்கனவே தண்டனை பெற்று சிறையில் இருந்து வந்த தீவிரவாதி என்று தெரியவந்துள்ளது.  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். கத்தியால் குத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் சுதேஷ் மமூர் பரஸ் அம்மான்(20) என்பது தெரியவந்துள்ளது. இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இவன், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவன். ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இவன், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.  இதற்காக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவனுக்கு 3 ஆண்டுகள் 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவன் கடந்த மாதம் பரோலில் வெளி வந்துள்ளான். தொடர்ந்து கண்காணிப்பில் இருந்த இவன் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதால் சுட்டு கொல்லப்பட்டான்.

டெலிகிராம் என்ற சமூக இணையதளத்தில் ‘ஸ்ட்ரேஞ்சர் டூ திஸ் வேர்ல்டு’ என்ற பெயரில் ஒருவர் தீவிரவாத தகவல்களை வெளியிடுவதாக போலீசாருக்கு ஏற்கனவே தகவல் வந்தது. அது அம்மான்தான் என தற்போது தெரியவந்துள்ளது. இவனது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வெடிமருந்து மற்றும் ஆயுதம் தயாரிப்பதற்கான ஆவணங்கள், கத்திச் சண்டை, தாக்குதல் பற்றிய குறிப்புகள் கண்டறிப்பட்டன. இச்சம்பவத்தையடுத்து சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுவிப்பதில் புதிய விதிமுறைகளை அறிவிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. 


Tags : knife attack ,London , London, stabbing, shooting, terrorist
× RELATED லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு...